Friday, 8 June 2012

இன்னா செய்தாரை

ஓர் ஊரில் சாம்பன் என்பவன் வாழ்ந்து வந்தான். எப்போதும் தீயவற்றையே நினைத்து வாழ்ந்தான். தீயவருடனேயே சேர்ந்து தீய காரியங்கள் செய்து பணம் சம்பாதித்து வாழ்ந்தான். ஒரு முறை வேறு ஊருக்குச் சென்று அங்கிருப்பவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்க எண்ணம் கொண்டான். அதனால் அடுத்திருந்த ஓர் ஊருக்குப் புறப்பட்டான்.

வழியில் ஒரு பெரும் காடு இருந்தது. அதைத் தாண்டுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. நடந்து நடந்து மிகவும் களைத்து விட்டான் சாம்பன். ஒரு பெரிய மரத்தடியில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான். பறவைகள் எல்லாம் கூட்டை நோக்கிப் பறக்கும்நேரம் ஆகிவிடவே எழுந்து அமர்ந்தான். பசி வேறு வயிற்றைப் பிசைந்தது. அப்போது அந்த மரத்தை நோக்கி புறா ஒன்று பறந்து வந்தது. 

ராஜகீர்த்தி என்பது அதன் பெயர். அது தன் இருப்பிடத்திற்கு யாரோ வந்திருப்பது கண்டு மகிழ்ந்தது. விருந்தினரை வரவேற்கும் எண்ணத்தோடு சாம்பனிடம் வந்து கூறியது.

"ஐயா, என் இல்லம் தேடி நீங்கள் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி. மிகவும் களைப்பாக இருக்கிறீர்களே. இருங்கள் நீங்கள் உண்ணக் கனி கொண்டு வருகிறேன் " என்று கூறிப் பறந்தது. சற்று நேரத்தில் சுவை மிக்க கனிகளைக் கொண்டு வந்து அவர் முன் வைத்து "உண்ணுங்கள் ஐயா, இரவு இங்கேயே தங்கி காலையில் புறப்படுங்கள்" என்று கூறி அவர் படுப்பதற்காக புற்களையும் மலர்களையும் பரப்பி படுக்கை தயாரித்துக் கொடுத்தது.


சாம்பன் மகிழ்ச்சியுடன் படுத்து உறங்கினான். ராஜகீர்த்தியும் சாம்பனுக்குப் பாதுகாப்பாக அவன் அருகிலேயே படுத்து உறங்கியது. மறுநாள் காலை சாம்பன் புறப்படும்போது ராஜகீர்த்தி என்ற அந்தப் புறா, "நண்பா, அடுத்த மலையில் என் நண்பன் விரூபாக்கன் என்ற அரக்கன் இருக்கிறான். என் நண்பன் நீ என்று தெரிந்தால் உனக்கு வேண்டிய உதவி செய்வான் நீ அங்கு செல்." என்று கூறியது.

ராஜகீர்த்திப் புறாவின் சொற்படியே சாம்பன் அடுத்த மலையை நோக்கிச் சென்றான். சற்றுத் தொலைவு சென்றபோது வேறு ஒரு மலை தெரிந்தது. அதன் மேல் ஏறிச் சென்றான் சாம்பன். அங்கு அரக்கர் கூட்டத்தின் நடு நாயகமாக வீற்றிருந்தான் விரூபாக்கன் என்ற அரக்க அரசன்.

அவனைப் பார்த்து அஞ்சினான் சாம்பன். "நீ யார்?"எனக்கேட்ட விரூபாக்கனுக்கு நடுங்கியபடியே பதில் கூறினான் சாம்பன். "நான் ராஜகீர்த்தியின் நண்பன்." இதைக் கேட்ட உடனே எழுந்து அருகே வந்த விரூபாக்கன் சாம்பனை அணைத்துக் கொண்டான்.

"நீ என் நண்பனின் நண்பன். இனி எனக்கும் நண்பன்." சாம்பானுக்கு பெரும் விருந்தும் பல பரிசுகளையும் கொடுத்து நிறைய பொற்காசுகளையும் மூட்டையில் கட்டிக்கொடுத்தான் விரூபாக்கன். 

அந்த அரக்க அரசனிடம் விடைபெற்றுக் கொண்ட சாம்பன் தன் சொந்த ஊர் நோக்கி நடக்க ஆரம்பித்தான். வரும் வழியில் தன் நண்பன் ராஜகீர்த்தியின் மரத்தடிக்கு வந்தான். அங்கு வழக்கம்போல் இருட்டும் நேரம் ராஜகீர்த்தி இல்லம் திரும்பியது. 

"நண்பா, உன் நண்பன் விரூபாக்கன் எனக்கு நிறைந்த பொன் கொடுத்துள்ளான். இன்று இரவு இங்கேயே கழித்து விட்டு காலையில் நான் புறப்படுகிறேன்." இதைக் கேட்ட ராஜகீர்த்தி மகிழ்ந்தது. தன் நண்பனுக்கு உண்ண உணவளித்து படுக்கை தயார் செய்தது.

நடு இரவில் கண் விழித்த சாம்பன் அருகே தூங்கும் ராஜ்கீர்த்தியைப் பார்த்தான். 'நான் இன்னும் வெகு தூரம் போகவேண்டுமே. உச்சி வேளையில் பசித்தால் என்ன செய்வது'  என்று சிந்தித்தவன் தன் அருகே படுத்திருந்த புறாவைக் கொன்றான். அதன் அழகிய இறகுகளைப் பிய்த்துப் போட்டான் அந்த உடலை நெருப்பில் வாட்டி எடுத்துக் கொண்டு தன் பொன் மூட்டையையும் தூக்கிக் கொண்டு வேகமாக அந்த இடம் விட்டுப் புறப்பட்டான்.

பொழுதும் விடிந்தது. நேரம் கடந்துகொண்டிருந்தது.தினமும்தன்னை வந்து பார்த்துச் செல்லும் நண்பன் ராஜகீர்த்தி வராததால் அரக்க அரசனான விரூபாக்கன் அவனைத் தேடி வரும்படி தன் காவலருக்கு கட்டளையிட்டான். அவர்களும் ராஜகீர்த்தியின் இல்லம் வந்து அங்கே புறாவின் இறகுகள் கிடப்பதைக் கூறினர்.

என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்ட விரூபாக்கன் சாம்பனைத் தேடி இழுத்து வரும்படி கட்டளையிட்டான். அவனது வீரர்களும் சிறிது நேரத்தில் சாம்பனைக் கட்டி இழுத்து வந்தனர். அவனிடம் நெருப்பிலிடப்பட்ட தன் நண்பனின் உடலைப் பார்த்து கதறி அழுதான் விரூபாக்கன். தனக்கு நன்மை செய்தவன் என்று கூட நினைத்துப் பார்க்காத நன்றி கெட்ட சாம்பனைக் கொன்று தின்னுமாறு பணித்தான்.

ஆனால் அரக்கர் அனைவரும் நன்றி கெட்டவனின் உடலைத் தின்னமாட்டோம் என்று கூறிவிட்டனர். அதன் பின் சண்டாளர்களிடம் கொடுத்தால் அவர்களும் நாங்கள் ஏற்கெனவே பாவம் செய்து சண்டாளர்களாக உள்ளோம். இந்தப் பாவியின் உடலைத் தின்றால் இந்த நரகத்திலேயே உழலவேண்டும். எங்களுக்கு வேண்டாம் என்று கூறவே சாம்பனை வெட்டி குழியில் போட்டு மூடுமாறு கட்டளையிட்டான்.

பின்னர் ராஜகீர்த்தியின் உடலுக்கு மிகுந்த மரியாதையுடன் அந்திம காரியங்களைத் தானே செய்தான். மிகுந்த துயரத்தோடு சிதையிலிடும்போது திடீரென்று ராஜகீர்த்தியின் உடலில் சிறகுகள் மிகவும் அழகுடன் வளரத் தொடங்கியது. அதைப் பார்த்த விரூபாக்கன் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தான். விண்ணிலே காமதேனுவுடன் இந்திரன் செல்வது தெரிந்தது. அதன் நிழல் ராஜகீர்த்தியின் மேல் பட்டதால் ராஜகீர்த்தி உயிர் பெறத் தொடங்கியது. விரூபாக்கணும் ராஜகீர்த்தியும் இணைந்து இந்திரனைத் துதித்தனர். 


இந்திரன் மகிழ்ந்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, ராஜகீர்த்தி, "தேவதேவா, அறியாமல் பிழை செய்த எங்கள் நண்பன் சாம்பனை மன்னிக்கவேண்டும். அவனையும் உயிர்ப்பிக்க வேண்டும்." என்று கேட்டுக் கொண்டது.

"உன் பெருந்தன்மையும், தீமை செய்தவனுக்கும் நன்மைசெய்ய எண்ணும் உன் நல்ல பண்புக்கும் உன்னைப் பாராட்டுகிறேன். உன் விருப்பப்படியே சாம்பனை உயிர்ப்பிக்கிறேன். நலமோடு வாழ்வீர்களாக"  என்று ஆசிவழங்கிவிட்டு மறைந்தார் தேவேந்திரன்.

உயிருடன் எழுந்து வந்த சாம்பன் ராஜகீர்த்தியிடம் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டான்.அவனை அணைத்து மகிழ்ந்தது ராஜகீர்த்தி. இத்தகைய உயர்ந்த பண்பு தனக்கில்லாமல் போயிற்றே என விரூபாக்கன் வெட்கப்பட்டான். தான் செய்த நன்றி மறந்த செயலுக்காக வெட்கப் பட்டான் சாம்பன். இருவரையும் அணைத்துக் கொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தது ராஜகீர்த்தி என்னும் புறா.

'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்'

என்று கூறியுள்ளார். ஒருவன் செய்த தவறுக்கு சிறந்த தண்டனை எது என்றால் அவன் நாணும்படியாக அவனுக்கு நன்மை செய்தலே ஆகும்.

No comments:

Post a Comment