Thursday, 14 June 2012

காய்கறிகள் மறதிநோய் ஏற்படாமல் தடுக்கிறது

உடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளப்படும் காய்கறிகள் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள சத்தான கொழுப்புகளும்,காய்கறிகளில் உள்ள தாவர எண்ணெய்களும்தான் அல்சீமரை தடுக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சிகாகோவில் உள்ள ஆய்வாளர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட 815 நபர்களிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுக்கு உயர்தர சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பால் பொருட்களை கொடுத்து சோதனை செய்தனர். அதில் வியப்பூட்டும் மாற்றம் ஏற்பட்டது. 80 சதவிகிதம் வரை அல்சீமர் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. காய்கறிகளில் உள்ள நல்ல கொழுப்புகள் ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கிவிடுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற காய்கறி உணவுகள் இதயநோய் ஏற்படாமல் தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த பழங்களை வாங்கி உண்பதன் மூலம் வைட்டமின் சி சத்தினை உடலில் தக்கவைக்கலாம். இது மறதிநோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் `சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழந்து காணப்படுவர். அவர்களின் முகத்தில் சிடு சிடுப்பு வந்துவிடும். இவர்களின் எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். அதேபோல் மறதிநோயில் இருந்து தப்பிக்க வைட்டமின் இ அதிகமுள்ள கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் வைட்டமின் இ சத்து சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும் .

இதேபோல் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள மேற்கொண்ட ஆய்வில் வைட்டமின் சி வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகள் அல்சீமர் ஏற்படாமல் தடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைட்டமின்களில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ஸ் மூளை நரம்புகளுக்கு நன்மை தருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூளை நரம்புகளில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுவதாலேயே அல்சீமர் எனப்படும் மறதிநோய் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட 980 நபர்களுக்கு வைட்டமின் சி, வைட்டமின் இ நிறைந்த காய்கறிகள், உணவுகளை உட்கொள்ள கொடுத்தனர் அதில் 242 பேர்களுக்கு அல்சீமர் நோய் பாதிப்பு படிப்படியாக குறைந்தது தெரியவந்தது.
 

No comments:

Post a Comment