Monday, 11 June 2012

ஒருவரை மற்றவருக்கு அறிமுகப்படுத்துவது எப்படி?

முதன் முதலில் ஒருவரை அறிமுகப்படுத்தும் போது, அவரைப் பற்றி நல்ல அபிப்ராயம் ஏற்பட வேண்டும் என்பதற்கு ராம காவியத்தில் ஒரு நிகழ்வு நடந்திருப்பதைக் காணலாம். விஸ்வாமித்திரர் தான் மேற்கொண்ட யாகத்திற்கு இடையூறு செய்த அரக்கி தாடகையை அழிக்க தசரதரின் மகன்களான ராம-லட்சுமணர்களை யாகம் செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். யாகத்திற்கு இடையூறு செய்த தாடகை, ராமரால் வதம் செய்யப்பட்டாள். பிறகு ராம-லட்சுமணர்களை அழைத்துக் கொண்டு மிதிலைக்கு வந்தார். அங்கு ஜனகரை அரச சபையில் ராம-லட்சுமணர்களுடன் சந்தித்த விஸ்வாமித்திரர், ஜனகரிடம், இவர்கள் தசரதரின் மகன்கள். யாகம் ஒன்று வெற்றிபெற அழைத்துச் சென்றேன். யாகம் வெற்றிபெற ராமன் உதவினான்.

அது மட்டுமல்ல இப்பொழுது வரும் வழியில் கல்லாக மாறியிருந்த அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்து, மீண்டும் அவளை வாழ வைத்தான், என்று ராமனின் தயாள குணத்தை வர்ணித்தார். இங்கு முக்கியமான சம்பவத்தை மறைத்து விட்டார். அதாவது, தாடகையை ராமன் வதம் செய்தான் என்பதைக் கூறாமல் அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்தான் என்றார். ஏன் அப்படிக் கூறினார்? முதன்முதலில் ஒருவரை மற்றவருக்கு அறிமுகப்படுத்தும் போது நல்ல அபிப்ராயம் ஏற்படுத்துவதற்காக அகலிகையின் சாபம் தீர்த்தான் என்றார். அதுவே, முதன் முதலில் யாகத்தின் போது தாடகை என்பவளை வதம் செய்தான் என்று சொல்லியிருந்தால், ஜனகன் மனதில் என்ன இருந்தாலும் ஒரு பெண்ணைக் கொன்றவன் என்ற அபிப்ராயம் ஏற்பட்டிருக்கும். அதனால் தான் அப்படிக் கூறினாராம் விஸ்வாமித்திரர்.

No comments:

Post a Comment