Monday, 11 June 2012

மாவீரர் சிவாஜி

மராட்டிய மாவீரர் சிவாஜி, முகலாய வீரர்கள் தங்கியிருந்த கோண்டானா கோட்டையைக் கைப்பற்ற முடிவு செய்தார். அதைக் கைப்பற்றிவிட்டால், தங்களுக்கு மாபெரும் வெற்றி என்றார் அவரது அன்னை ஜீஜாபாய். அம்மா சொன்னதை சிவாஜி நிறைவேற்றாமல் இருந்ததில்லை. அங்கே 1500 வீரர்கள் காவல் காத்தனர். சிவாஜியிடம் இருந்ததோ 500 பேர் கொண்ட படை தான். அந்தக்கோட்டை மலை உச்சியில் இருந்தது. செங்குத்தான பாறைகளில் ஏற வேண்டும். ஒருவேளை எதிரிகளிடம் சிக்கிவிட்டால், அங்கிருந்து கீழே விழுந்து சாவதைத் தவிர வேறு வழியில்லை. அதைக் கைப்பற்றும் பொறுப்பை, சிவாஜியின் தளபதி தானாஜியும், அவரது சகோதரர் சூர்யாஜியும் ஏற்றுகொண்டனர். நள்ளிரவு வேளை... அப்போது, ஒருவன் மரப் பெட்டியுடன் வந்தான். அதைத் திறந்து ஏதோ ஒரு விலங்கை எடுத்தான். அது உடும்பு.

அதன் உடம்பில் ஒரு நீண்ட கயிறின் ஒரு முனையைக் கட்டினான். உடும்பை எடுத்து மலைச் சரிவில் வைத்து விசிலடித்தான். விசில் சத்தம் கேட்டதும் அந்த உடும்பு படபடவென ஏறியது. பாறையில் அது வேகமாக ஏறி உச்சியில் நின்றது. அவன் கயிறைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறினான். உடும்பைக் கட்டிய கயிறை அவிழ்த்து, அங்கே இருப்பவர்கள் தூக்கத்தில் இருப்பதாக சைகை காட்டினான். உடனடியாக 500 பேரும் ஏறி மலைஉச்சியை அடைந்தனர். காவலாளிகளை சத்தமின்றி கொன்றனர். ஆனாலும், அங்கிருந்த படைகள் எப்படியோ, வீரசிவாஜியின் படைகள் வந்ததை அறிந்து அவர்கள் மேல் பாய்ந்தனர். கடும் சண்டையில் தானாஜி கொல்லப்பட்டார். தளபதியை இழந்த சிவாஜி படைகள் தயங்கினர்.

அவர்களிடம் சூர்யாஜி, 1500 பேருடன் 500 பேர் மோதுவது கடினமே, அதற்காக, இங்கிருந்து கீழே குதித்து சாவதை விட, இவர்களுடன் மூர்க்கமாகப் போராடி வீரமரணம் அடையலாம். இவர்களில் பலரையும் கொல்லலாம், என ஊக்கப்படுத்தினார். படைவீரர்கள் இந்த வீர உரையால் எழுந்தனர். 1500 பேரையும் வெட்டிச் சாய்த்தனர். தானாஜியின் மறைவைக் கேட்ட சிவாஜி, கர் ஒன்றுக்காக சிம்மத்தை இழந்தேனே, என வருந்தினார். கர் என்றால் கோட்டை. எனவே அந்தக் கோட்டைக்கு சிம்மகர் கோட்டை என்று பெயர் வைத்தார். 
 

No comments:

Post a Comment