நாம்
காணும் அதிசயிக்கத்தக்க அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, தற்கால
உலகை அறிவியல் உலகம் என்று வர்ணிப்பர். கணனி, மின் அஞ்சல், இணையம் என தகவல்
தொழில் நுட்பத்துறை பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி உலகை ஒரு பூகோளக் கிராமமாக
மாற்றியுள்ளது. இன்றைய நவீன விஞ்ஞான சூழலில் ஏற்பட்டுள்ள ஏராளமான
முன்னேற்றங்களினால் மனிதனின் வாழ்க்கைத் தரம் குறைந்து, போட்டி, பொறாமைகளினால் நமது
வாழ்க்கை சீரழிந்துவிட்டது. நாம் நமது கலாச்சாரத்தை, பண்பாட்டை, நாகரீகத்தை இழந்து தவிக்கிறோம். வளர்ந்து வரும்
நாகரீகத்தின் விளைவுகளைப் பற்றி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.
அறிவும், அறிவியலும்
இன்றி நாகரீகம் தோன்ற முடியாது என்பது உண்மை, ஆனால் அறிவியல் மனிதனின் வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கு உதவ வேண்டுமே
தவிர மனிதனின் வாழ்க்கைத் தரத்தை குறைக்கக் கூடாது. ஆனால் இன்றைய நவீன விஞ்ஞானம்
மனிதனின் வாழ்க்கைத் தரத்தை குறைத்து விட்டது, உதாரனமாக இயந்திரங்களின் பயன்பாடு,
நாகரீக முன்னேற்றம் என்ற போர்வையில் கலாச்சார சீரழிவு, கல்வி என்ற போர்வையில்
குழந்தைகளை கசக்குதல், மதம் என்ற போர்வையில் வெடிகுண்டு கலாச்சாரத்தை வளர்த்து
விடுதல் இன்னும் பல.
நாகரீக
முன்னேற்றம் என்ற போர்வையில் கலாச்சார சீரழிவு நடக்கிறது. ஆண்களும், பெண்களும்
சமம் என்று வேலையில், சொத்தில் என எல்லா இடங்களிலும் பிரச்சனைகள் அதிகமாகிவிட்டன. நம்
நாட்டில் பெண்களை தெய்வமாக, தாயாகத்தான் பார்த்தோம் ஆனால் இன்று ஆண்களும்
பெண்களும் சமம் என்று சொல்லி பெண்களை பெண்களே இழிவு படுத்துகின்றனர். இன்று நாம் மேல் நாட்டு கலாச்சாரத்தை பார்த்து
அதை அப்படியே பின்பற்ற தொடங்கிவிட்டோம் ஏன் என்று கூட சிந்திக்காமல்! உதாரணமாக காதலர் தினம், தாய்பால்
வார தினம், நண்பர்கள் தினம், அம்மா தினம், அப்பா தினம் மற்றும் முட்டால் தினம்
இன்னும் பல. இந்த தினங்கள் அனைத்தும் நம் நாட்டிற்கு உகந்ததா, தேவையா என்று கூட
நாம் யோசிப்பதில்லை.
நம்
நாட்டில் காதலை பற்றி பாடாத புலவர்களே இல்லை ஆனால் இன்று காதல் என்ற போர்வையில்
இளைஞர்களும், யுவதிகளும் தங்களுடைய வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். காதலர்களின்
திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலோ, காதலில் தோல்வி அடைந்தாலோ
தற்கொலைக்குக் கூட தயங்குவதில்லை. காதலில்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்று
நினைக்கின்றனர் அது தவறு. படிக்கும் காலத்தில் காதல் தேவையற்றது என்பதை இன்றய இளைய
சமுதாயம் புரிந்து கொள்ள முன் வர வேண்டும். காதலிப்பது தவறில்லை. திருமணத்திற்கு
பின் காதலி. யார் தடுத்தார்கள். காதலிப்பவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் திருமணத்திற்கு
பின் குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக நடத்துகின்றனர் ? காதலால்
சமுதாயம் சீரழிகிறதே ஒழிய முன்னேறியுள்ளது என்று கூற முடியாது. காதலர்களை காதலர்
தினம் ஊக்குவிக்கின்றது.
தூய
நட்பு என்பது எதிர்பார்ப்புகளற்றது. நம் நாட்டில் நண்பர்களுக்கு மிக சிறந்த
உதாரணம் ஸ்ரீ.கிருஷ்ணனும் சுதாமாவும். திருவள்ளுவர் கூட திருக்குரளில் நட்பை பற்றி
கூறியுள்ளார். ஆனால் இன்று புரியா புதிர் ஏன் நம் நாட்டு இளைஞர்களும் யுவதிகளும் ஏன்
இந்த நண்பர்கள் தினத்திற்கு இவ்வளவு முக்கியத்வம் கொடுக்கிறார்கள். இந்த நண்பர்கள்
தினம் ஆண்களையும், பெண்களையும் இனைக்க ஒரு பாலமாக அமைகிறது. கல்வி கற்கும்
வேளையில் தேவையில்லாததை கற்கின்றனர் இன்றய இளைஞர்களும் யுவதிகளும். நம் நாட்டு
கலாச்சாரத்தில் சகோதரர் தினம் கொண்டாடப்படுகிறது.
நண்பர்கள் தினம் அல்ல ஏன்? சகோதரர்களின் உறவுகளை
மாற்ற முடியாது ஆனால் நண்பர்களிள் உறவகள்
மாறக் கூடியது. எனவே நம் நாட்டு கலாச்சாரத்தில் சகோதரர் தினத்திற்கு அனுமதி உண்டு.
நண்பர்கள் தினத்திற்கு அனுமதி இல்லை. நட்பு என்பது தவறில்லை ஆனால் நட்பு என்ற
போர்வையில் இளைஞர்களையும், யுவதிகளையும் தவறான பாதைக்கு இழுத்து செல்ல யாருக்கும் உரிமையில்லை.
அம்மா
தினம், அப்பா தினம் ஏன் இந்த தினங்கள் யாராவது சிந்தித்தது பார்த்தோமா இல்லை. மேலை
நாடுகளில் குழந்தைகள் அம்மாவையோ, அப்பாவையோ பார்ப்பது அரிது, பல காரணங்கள் அம்மா
வேறு ஒருவருடனும், அப்பா வேறு ஒருவளுடனும் குடும்பம் நடத்துவார்கள். அது அவர்கள் கலாச்சாரம்.
அதனால் வருடத்தில் ஒரு நாளாவது குழந்தைகள் அம்மாவையோ, அப்பாவையோ பார்த்து வாழ்த்து
பெற வேண்டும் என்பது தான் அம்மா தினம், அப்பா தினத்தின் நோக்கம். வருடத்தில் 365
நாட்களும் நம் நாட்டில் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோருடன் வசிக்கின்றனர். ஏன்
நம் நாட்டு குழந்தைகள் கொண்டாட அம்மா, அப்பா தினத்தை வேண்டும்? புரியாத புதிர் !
இயந்திரங்கள்
இயந்திரங்கள்
என்பது மோட்டார் வாகனங்கள், கணனி, கை பேசி போன்ற ஏராளமான வகைகள். அவை எவ்வாறு
மனிதனை சீரழிக்கிறது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். இயந்திரங்களினால் சுற்றுச்
சூழல் மாசுபடுகின்றன. மனிதன் இயந்திரத்தைப் பயன்படுத்தி வேகமாக காட்டை
அழிக்கிறான். மோட்டார் வாகனங்களினால் மனிதனின் உடல் உழைப்பு குறைந்து பல புது
வகையான நோய்கள் அதிகரித்து விட்டன. தீராத நோய்கள், மருந்தே இல்லாத நோய்கள் என பல
வகையான நோய்கள் மனிதனை வாட்டி எடுக்கின்றன. மனிதனின் சீரழிவிற்க்கு மிக முக்கியமான
காரணம் மோட்டார் வாகனங்கள். கணனி மற்றும் கை பேசி போன்ற ஏராளமான நவீன
சாதனங்களினால் இன்றைய உலகில் பல வகையான முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், தீமைகளே
அதிகம்.
கல்வி
கல்வி
என்பது மனிதனை மனிதனாக வாழ வைக்க உதவ வேண்டும். ஆனால் இன்றய கல்வி பணம்
சம்பாதிப்பதற்கு உதவுகிறதே தவிர, சீரான, சிறப்பான வாழ்க்கையை கொடுக்கிறது என்று
சொல்ல முடியாது. போட்டியையும், பொறாமைகளையும் வளர்த்து சமுதாயத்தை சீரழித்து
விட்டது. கல்வி தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். ஆனால் இன்றய மாணவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் தன்னம்பிக்கையுடன் பிரச்சனைகளை
எதிர்கொள்கின்றனர். பொது தேர்வில் தோல்வி அடைந்தால்
தற்கொலை செய்து கொள்ளும்
மாணவர்களின் எண்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நம் நாட்டில்
கல்வி கற்றவர்கள் செய்யும் தவறுகளே அதிகம் என்கிறது ஒரு தகவல். ஆகையால் இன்றய கல்வியில்
மாற்றம் தேவை என்பதை இன்றய கல்வியாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
மதம்
மனித வாழ்வு வரலாற்று நோக்கில் மூன்று
கட்டங்களை கொண்டது. அவையாவன :
1. சமயம்
2. தத்துவம்
3. அறிவியல்
உலகில்
அனைத்து சமூகங்களும் அன்பையே போதிக்கின்றன ஆனால் மனிதன் மதத்திற்கு அடிமையாகி
விட்டான். உலகம் முழுதும் ஒரு குடும்பம், உயிரனைத்தும் இறை வடிவம் என்றும்
யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகமும் என்று முழக்கமிட்ட சமூகத்தில் மதத்தின்
பெயரால் சண்டைகளும் சச்சரவுகளும் அதிகரித்து விட்டன. உலகில் எந்த மதமாவது
போதித்ததா மற்ற மதங்களை அழித்து விடு என்று இல்லை இல்லவே இல்லை. பிறகு ஏன்
மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். சிந்திக்க வேண்டிய விஷயம். இதற்கு
மிக முக்கியமான காரணம் மத தலைவர்களே. தங்களது மதமே சிறந்தது, உயர்ந்தது என்று கூறி
சாதாரண மக்களை பலி கடா ஆக்குகின்றனர். இந்த தவறு விஞ்ஞான முன்னேற்றத்தால்
அதிகரித்து விட்டது. மதம் என்பது அபினை போன்றது, மனித சமூகம் அதிலிருந்து விடுபடாத
வரை அதற்கு விடுதலை இல்லை. மனித சமுதாயமே விழித்தெழு.
சமயம், தத்துவம், அறிவியல் என்பது ஒன்றோடு
ஒன்று இனைந்தது. இன்றய சூழலில் மூன்றுமே இன்றியமையாதவை. ஆகவே எதையும்
புறக்கணிக்காமல் மூன்றையும் அளவோடு பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மிஞ்சினால்
அமுதும் நஞ்சு என்பதை நினைவில் கொண்டு வளர்ந்து
வரும் நாகரீகத்தை உபயோகிக்க வேண்டும்.
இன்றைய
நவீன விஞ்ஞான சூழலில் ஏற்பட்டுள்ள ஏராளமான முன்னேற்றங்களினால் நோயற்ற, சந்தோஷமான
மனிதனைப் பார்ப்பது அரிதாகி விட்டது. தங்களுடைய வாழ்க்கைத்திறன் அதிகரித்திருப்பதாக நினைக்கும்
அறிவாளிகள் கூட இன்றைய சூழலில்
சிக்கி தவிக்கின்றனர். காலையில்
எழுந்தது முதல் இரவு உரங்குவது வரை நம் வாழ்கை முறை மாறி உடல் உழைப்பு
குறைந்ததனால் உடலின் பலம், நோய்
எதிர்ப்பு திறன் ஆகியவை குறைந்ததுடன் ஆயுளும் சுருங்கி விட்டது. விஞ்ஞானம், நாகரீகம் வளர்ந்தது,
ஆனால் மனிதனின் வாழ்க்கைத் தரம் குறைந்து விட்டது. போட்டி, பொறாமைகளினால் நமது
வாழ்க்கை சீரழிந்து விட்டோம்.
நம்
நாட்டில் வாழ்ந்த ரிஷிகள் நமக்கு கொடுத்த விஷயங்கள் ஏராளம் அவற்றினுள் யோகம்
முதலிடம் வகிப்பதோடு மட்டுமல்லாமல் இன்றய தேவையும் கூட. இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தால்
யோகத்தைப் பற்றி நமக்கு பல அரிய புத்தகங்களும்,
விளக்க உரைகளும் எளிதில் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தி யோகத்தை கற்று நல்ல வாழ்க்கை வாழ முயற்சி செய்ய
வேண்டும். யோகத்தின் வழி வாழ்க்கை வாழ்ந்தால் நம் உடலும்,
உள்ளமும் ஆரோக்கியமாக இருப்பதுடன் சமுதாயத்தில் அமைதியும்,
சாந்தமும் நிலவும் மறுக்க முடியாத உண்மை. நல்
வழி வாழ நினைக்கும் நல் உள்ளங்களுக்கு இறைவன் நிச்சயம் உதவி புரிவான்.
No comments:
Post a Comment