Tuesday 21 February 2012

நாட்டு நடப்பு

ஆட்டோ ஓட்டுனர்கள் என்றாலே அலறி ஓடும் சென்னைவாசிகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில், தனது வித்தியாசமான செயல்பாடுகளால் பாராட்டைப் பெற்றுள்ளார் விருகம்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஸ்ரீபாலாஜி. "பிரசவத்திற்கு இலவசம்' "சீறும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதே' போன்ற வசனங்கள் ஆட்டோக்களின் பின்புறம் இருப்பது வாடிக்கை. ஆனால், பாலாஜின் ஆட்டோவில் முகப்பில், "தேங்யூ பார் ஆர்.டி.ஓ' என்றும், இடப்பக்கத்தில் "வெயில், மழை பாராமல் உழைக்கும் எம்.டி.சி., ஆம்னி, மொபசல் பஸ் டிரைவர்கள், நடத்துநர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு 2 கி.மீ., இலவசம்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்டோவின், வலப்பக்கத்தில் "இரவென்று, பகலென்று பாராமல் மக்கள் பணியாற்றும் அனைத்து பிரிவு காவல் துறையினருக்கு 2 கி.மீ., இலவசம்' என்றும், பின்புறத்தில் "பிரசவத்திற்கு 15 கி.மீ., இலவசம் - சாலைகளில் விபத்துக்குள்ளாவோருக்கு, அருகிலிருக்கும் மருத்துவமனை வரை இலவசம்' என்றும் எழுதப்பட்டுள்ளது.

இந்த வாசகங்களை எழுத்தில் மட்டுமல்லாது, செயல்பாட்டிலும் நடைமுறைப்படுத்தி வருகிறார் பாலாஜி.திருவண்ணாமலையில் பிறந்த பாலாஜி, தற்போது விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

கார்கில் போர் சமயத்தில்,"நாட்டிற்கு தங்களாலான உதவிகளைச் செய்யலாம்' என்ற அறிவிப்பு வர, "எனக்கு டிரைவிங் தெரியும்' என்று சொல்லி, "பரேலி கேண்ட்' பகுதியில் இரண்டு ஆண்டுகளாக ராணுவத்தினருக்கு தற்காலிக ஓட்டுனராக பணியாற்றியிருக்கிறார். ""எங்கேயோ நடக்கிற சில கெட்ட சம்பவங்களை வச்சு, அந்த துறை சார்ந்த எல்லாருமே தப்பானவங்கனு நெனைக்க கூடாது. நான் எழுதியுள்ள துறையில இருக்கிற, நேர்மையாக பணியாற்றும் அத்தனை அதிகாரிகளுக்கும் இந்த சேவை சமர்ப்பணம்'' என்கிற பாலாஜி, ஆறு மாதங்களுக்கு முன்தான் தவணை முறையில் சொந்தமாக ஆட்டோ வாங்கியிருக்கிறார்.விதவைப்பெண், ஏழைக்குடும்பப்பெண் என விளிம்புநிலைப் பெண்ணை மணந்து கொள்ள உத்தேசித்திருந்த பாலாஜி, இப்போது மணந்திருப்பது இதய நோயாளி ஒருவரை. எத்தனையோ முறை பெண் பார்த்து விட்டுச் சென்ற பின்பும், இதயப் பிரச்னை காரணமாக மணமாகாமல் இருந்த சத்யாவை, தானே முன்வந்து மணம் முடித்திருக்கிறார். 

இத்தம்பதிக்கு அழகான இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று தன், "ரேஷன் கார்டுக்கு' கிடைக்கும் இலவச அரிசியை, தயிர் சாதமாக சமைத்து, உணவில்லாமல் வாடும் நூறு பேருக்கு வழங்குகிறார். மேலும் பணக்காரர்களின் வீடுகளுக்கு சென்று, பழைய ஆடைகளை வாங்கி இல்லாதவர்களுக்கு வழங்கி வருகிறார். இவரது ஆட்டோவில் ஒருமுறை பயணித்தவர்கள், மீண்டும் விரும்பித் தேடிச்சென்று பயணிக்கத்துவங்கியுள்ளது இவரது சேவைக்கு கிடைத்த மரியாதை. ஆட்டோகாரர்கள் என்றாலே ஏமாற்றுபவர்கள், மீட்டருக்கு சூடு வைப்பவர்கள் என்ற அடையாளங்களைப் போக்க, பாலாஜியைப் போன்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். 

விபரங்களுக்கு
 

No comments:

Post a Comment