Tuesday 9 April 2013

நல் தெய்வம் பசு

ஆர்க்கும் நல் தெய்வம் பசு எனும்
ஆகம மறைகள்
ஏர்க்கும் நல்தெய்வம் இதனின் ஊங்கு
இல்லையாம்; எண்ணி
நீர்க்கும் புற்கும்  நல் நிழலுக்கும்
நேரம் முன் இயற்றிப்
பார்க்கும் தன்தொழில் பின்படில்
உழும் தொழில் பலிக்கும்.  (6)


ஆகமங்களும், வேதங்களும்  யாவர்க்கும் நல்ல தெய்வம் பசு என்றே கூறுகின்றன. ஏர்த்தொழிலுக்கும் இதனை விட நல்ல தெய்வம் வேறு இல்லை என்று எண்ணி உழவன் அவை அருந்தும் நீர், மேயும் புல், தங்கும் நிழல் ஆகிய வசதிக்குரிய நேரத்தையும் செயலையும் முன்னர் அமைத்து, தனது தொழில் நலன்களை பின்னால் வைத்துக் கொல்வானேயானால் அந்த உலவனுக்கு உழுதொழில் சித்திக்கும்.

பொற்க்குறை, பசுக்குறை புருவையின் குறை
நெற்குறை பால் தயிர் நெய் எருக்குறை
சொற்க்குறை யாவையும் தொடர்ந்து சூழும்கால்
 புற்குறை இலமையில் புகுந்த வன்முறை. (17)

பொன் மாடு ஆடு நெல் பால் தயிர் நெய் எரு  முதலான இவற்றின் குறைகளால் உழவனின் புகழுக்கும் குறைவு உண்டாம். இவை யாவும் எதனால் ஏற்பட்டவை என்று ஆராயுமிடத்து புல் பரப்பு நிலம் இல்லாத காரணத்தால் ஏற்பட்ட வலிய குறையாம்.

மட்டுக்கு ஆகலா வயிற்றினுக்கு உழைத்திடின் அவற்றின் 
பாட்டுக்கு ஆகவும் மிகும்பலன் அதில் பகிர்ந்த எடுத்து
ஆள் தொக்கால் விலை எத்துனை அத்துணை சரியாய்
ஊட்டற்கு ஆவன விலை கொண்டு ஊட்டு உணவு உளவேனும். (20) 

மாட்டின் வயிற்றினுக்கு உதவாத மிளகாய், புகையிலை முதலிய பணப் பயிர்களின் பொருட்டு அந்த மாடுகள் பாடுபடுவதால் அவைகளின் வேலைகளுக்காகப் பணப் பயிரில் அதிகமாக கிடைத்த பொருள்களைப் பங்கு செய்து எத்தனை  ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை இந்த மாடுகள் செய்திருக்கின்றன என்பதை எண்ணி வேறு உணவுப் பயிர்களின் வருமான மிகுதியில் பருத்தி விதை, பிண்ணாக்கு முதலியன விலைக்கு வாங்கி சத்துள்ள அவ்வுணவை அவைகளுக்கு ஊட்டுவாயாக.

பகைத்து எதிர்த்திடில் கருவியாய் உதவுதல் பாரான் 
மிகுந்த வன்  படை விரயம் என்றே செலவிட்டான் 

வகுத்த பூர்வ சாதனம் என் மனத்தினில் அடையான்
தொகுத்த தீன்விற்கச்  சேவிற்பான் இருவரும் சுமடர். (21)

பகைவர்கள் எதிர்த்து வந்த போது அவர்களை நாட்டுக்குள் விடாமல் பாதுகாக்கும் படைகளின் உதவியை எண்ணாமல், மிகுதியான படையால் பொருள் விரயம் ஏற்படும் என்று தனது அரச பரம்பரைச்  சாதனத்தையும் கருதாமல் படைகளை குறித்த அரசனும், பொருள் வரவை நினைந்து, தீனிப்போர்களையும் பசு மாடுகளையும் விற்ற உழவனும் மடையர்கள் ஆவார்கள்.

துவரை கொள் கடலைகள் சொன்னல் மாடங்கள் 
அவரைகள் ஆதியில் அகலும் போக்கு எலாம்
எவையும் ஒன்றாக்குவி ஏற்ற காலத்தில் 
அவை மாறி ஆதிகட்கு அறிய தீனும் ஆம். (23)

துவரை கொள் கடலை சோளம் பயறு வகைகள் முதலியவற்றில் இருந்து கழியும் சக்கைகள், பொட்டுக் கள் அனைத்தையும் ஒன்றாகக் குவித்துவை. அவை வெருமைக்காலத்தில் ஆடு மாடுகளுக்கு அரிதான தீனி ஆகும்.

சொன்னல் -  சோளம், மாடங்கள் - உளுந்து முதலிய பயறு வகைகள். அகலும் போக்கு - கழியும் பொட்டுக்கள். மறி - ஆடு . தீனும் - தீவனமும்

வாய் இலை என்னினும் வருத்தம் இல்லையோ
ஆய்தரத் தக்கதோ அமைப்பு இது என்பிரேல்
சேய்  சொல்லத் தெரிந்ததோ தேகம் போற்றுதல்
தாய் செயல் அல்லவோ தாங்கு சாலத்தை. (31)

ஆவினங்கள் வாய் பேசுவதற்கு இல்லை என்றாலும் அதற்கு வருத்தம் இல்லாமலா இருக்கும்? இது ஆராய வேண்டிய ஒன்றா? அவைகளின் அமைப்பு அது என்பாயானால், ஒரு குழந்தை சொல்லிய பின்பா அதன் உடம்பை பாதுகாக்கிறோம்? அக் குழந்தையை பாதுகாத்தல் தாயின் கடமை அல்லவா? அது போலப் பசுக்கூட்டதை நீ தாயாக இருந்து பாதுகாப்பாயாக.

கொள்ளிலோ வினை உயிர்ப்புகள் ஆதிபார் கொடையில் 
தள்ளி ஈயினும் பாதுகாப்பவர்க்கு நீ தருக
அள்ளி ஈயினும் கொலைஞருக்கு அளித்திடேல் அளிக்கில்
விள்ளும் அக்கொலைக்கு உடன்படும் பாவம் உன் மீதாம். (35)

ஆவினங்களில் ஒன்றை வாங்கும் போது அது வேலை செய்வதில் பெரு மூச்சு விடுகிறதா, அல்லது இயல்பான முறையில் மூச்சு விடுகிறதா என்பது போன்றவற்றை கவனித்து வாங்குக. அதனை விலைக்கு கொடுக்கும் போது, விலையைக் குறைத்துக் கொடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டாலும் அதனை பாதுகாப்பவனை பார்த்து கொடு. அதனை கொலை செய்து உண்பவன் அதிக விலை கொடுத்தாலும் அவனுக்கு கொடுக்காதே. கொடுத்தால் அக் கொலைக்கு உடன்படும் பாவம் உன்னை வந்து சாரும்.


மட்டுக்  கொட்டில் 

தள்ளு கோசலம் கோமயம் பின்வழி தரவே 
உள்ளுயர்ந்த நல் தளத்தினது உரைவழி சாடித்
தள்ளினும் எதிர் இறப்பினது ஈரம் ஆதிகள் ஆம் 
கொள்ளு குற்றம் கொண்டு ஓடுகால் வலியது கொட்டில். (39)

பசு கொட்டிலானது பசுக்களின் சாணம், மூத்திரம் முதலியன பின்னால் வழிந்தோடும் படியான உயர்ந்த தளத்தினை உடையதும் சாணம், மூத்திரம் முதலியன உறைந்து கிடந்த வழி, அவைகளை தள்ளிக் கழுவும் போது அக்கழிவுகளை அகற்றிக்கொண்டு ஓடும் கால்வாய்களை உடையதும் நிழல் தரும் தாழ்வாரம் உடையதுமாய் இருக்க வேண்டும்.

அளவு உறும் தோல் பிணைப்பு ஆகும் ஆம் சுழி 
உள சுழிக்கு அதிகம் தோற்கு  ஊனமும் தெரி
வன்முறும் மயிலை உத்தமம் கறுபபினது 
இளிவுறும் அதமம் ஆம் ஏனை மத்திமம். (58)


அளவுற்ற தோல் பிணைத்து நிற்கும் இடங்களில் சுழிகள் தோன்றும். இருக்கும்  அளவுக்கு மேல் சுழிகள் இருப்பின் அவை தோலுக்குப் பலக்குறைவே அல்லாது வேறு கெடுதி இல்லை என்று தெரிந்து கொள். காளைகளில் மயிலை நிறம் உத்தமம். கருப்பு நிறம் அதமம். மற்ற நிறங்கள் மத்திமம் என்றுணர்க.

வீழில் மெய்யுறல் சிதறுதல் விழுசலம் பி(ன்)னிடல்
பாலுறப் பருபருத்தலாய் இடை நடுப்பரிதல்
குழுரோகம் தன்னால் இவை முதலிய சூழால்
ஊழின் மாவலி உயிர் நிலை ஊட்டிய மருத்தின். (53)

விழுது போல் உடம்பு மெலிதல், மாட்டின் வாயில் ஊறி விழும் சலவாய் நார் போன்று பின்னித் தொங்குதல், ரோமம்  சிலிர்த்து காணுதல், இடுப்பும் வயிறும் நெளிந்து வருந்துதல் போன்ற நோய்களின் குறிகளை எண்ணாத வைத்தியன் ஊட்டிய மருந்தால் அவைகள் உயிர் நிலைக்கின்றதென்று கொள்ளுதற்கு இல்லை. ஊழின் வலியால் அவ்வுயிர் உடலில் நிலைத்து இருக்கிறது என்று கொள்ளலாம்.

பசு சம்பந்தமான பெயர்கள்

நம் நாட்டில் ஆயிரக்கணக்கான பெயர்கள் பசு சம்பந்தமானவை உதாரணம் கௌகாத்தி, கோரக்பூர், கோவா, கோத்ரா, கோதாவரி, கோவர்தன், கௌதம், கோமுக், கோகர்ம இன்னும் பல. இதிலிருந்தே தெரிகிறது நம் நாட்டில் பசுக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்துள்ளனர் என்பது.