Friday 8 June 2012

காளிதாசனின்

போஜராஜனின் அவையில் நவரத்தினங்கள் என்று சொல்லத்தக்க ஒன்பது கவிகள் இருந்து அவையை அலங்கரித்தனர். அவர்களுள் தண்டி கவியும் காளிதாசனும் மிகவும் சிறப்புப் பெற்றவர்கள். அதிலும் காளிதாசன் மன்னனின் தனி அன்பையும் நட்பையும் பெற்றவன். முதன்மைக் கவியான தன்னை விட காளிதாசன் எந்த விதத்தில் உயர்ந்தவன் என்று மன்னன் காளிதாசனைக் கொண்டாடுகிறார்? என மனதுக்குள் பொறாமை கொண்டார் தண்டிகவி. இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஒருநாள் தண்டி வழக்கம் போல் சரயு நதியில் நீராடி நதிக்கரையில் யோக நிலையில் அமர்ந்தார். வெகு நேரம் கடந்து கண்களைத் திறந்தார். காளிதாசன் அப்போதுதான் நதியில் மகிழ்ச்சியோடு நீந்தி நீராடிக் கொண்டு இருந்தான். ஒரு கவியாக இருப்பவன் அத்துடன் பெரும் காளி பக்தனாக இருப்பவன் சூரியன் உதித்து இத்தனை நேரம் கடந்து நீராடுகிரானே! இவன் எப்போது காளியைப் பூஜை செய்வது அவைக்கு எப்போது வருவது. இன்று அவைக்குத் தாமதமாகத்தான் வரப்போகிறான். என எண்ணியவாறே புன்னகையுடன் காளிதாசனை ஏளனமாகப் பார்த்தவாறே சென்றார் தண்டிகவி.

இல்லம் சென்ற கவி ஆடை ஆபரணம் பூண்டு அலங்கரித்துக் கொண்டு உணவு உண்டு அவைக்கு வந்தார். அவைக்கு வணக்கம் கூறியவாறே காளிதாசனின் இருக்கையைப் பார்த்தவுடன் திகைத்தார். அங்கே அவருக்கு முன்னாலேயே அவைக்கு வந்து அமர்ந்திருந்தான் காளிதாசன். அத்துடன் பொருள் பொதிந்த புன்னகையை தண்டியின் மேல் வீசியவாறே அமர்ந்தான். தனக்குப் பின்னால் தான் நீராடியவன் எப்படி இவ்வளவு விரைவில் வந்து அமர்ந்துள்ளான் என எண்ணியவாறே தன் ஆசனத்தில் அமர்ந்தார் தண்டிகவி.

அன்று தண்டியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. காளிதாசன் எந்த கடமையும் செய்யாமல் அவைக்கு வந்துள்ளான் அதனால்தான் இவ்வளவு விரைவில் அவனால் வரமுடிந்துள்ளது. ஆனால் மன்னனோ இவனைத் தன் உயிர் நண்பனாகவும் சிறந்த காளிபக்தனாகவும் எண்ணி பெருமைப் படுததுகிறாரே? எப்படியும் இவனது பெருமையைக் குலைத்து விடவேண்டும். மீண்டும் சிறந்த காளிபக்தன் என்ற பெயர் எனக்கே வரும்படி செய்ய வேண்டும் என முடிவு செய்து கொண்டார்.

வழக்கம்போல் தண்டி கவி நதியில் குளித்து கண்களை மூடி மனதுக்குள் இறைவியைப் பூஜித்தார். அன்றும் அவர் கண்களைத் திறந்தபோது புன்னகையுடன் காளிதாசன் தன்னைக் கடந்து செல்வதைக் கண்டார். இதே நிகழ்ச்சி தொடர்ந்து பல நாட்கள் நீடித்தது. சூரிய உதயத்திற்கு முன்பே தண்டி கவி நீராடி கரையில் அமர்ந்து தேவியைப் பூஜிப்பதும் வெகு நேரம் கழித்து காளிதாசன் வருவதுமாக நாட்கள் நகர்ந்தன.

அன்று தண்டி குளித்து முடித்து ஜபதபங்களை முடித்து நிஷ்டையில் அமர்ந்து காளியைப் பூஜிக்கத் தொடங்கினார். ஆனால் அவரது கவனம் நீராடும் காளிதாசன் மேல் சென்றது. அதனால் மனதில் காளிக்கு அலங்காரம் செய்யும் போது கழுத்தில் மாலையிடாமலேயே அவள் தலையில் கிரீடத்தைச் சூட்டிவிட்டார். சட்டென கவனத்தைத் திருப்பியவர் தன் பிழையை அறிந்தார். இப்போது என்ன செய்வது? இப்படியே மாலையிட்டால் கிரீடம் விழுந்துவிடும் கிரீடத்தை எடுத்துவிட்டு மாலையிட்டால் அலங்காரத்தைக் கலைத்த தோஷமாகுமே என்ன செய்வது எனத் திகைத்தவாரே "தாயே! இது என்ன சோதனையம்மா எனக்கு?" என்று மனதுக்குள் கலங்கியவாறே அமர்ந்து விட்டார் தண்டி.

நிதானமாக ஸ்நானத்தை முடித்துக் கொண்டு கரையேறினான் காளிதாசன். கலக்கத்தோடு அமர்ந்திருந்த தணடியைக் கண்டான். நிதானமாக அவரது அருகே வந்து நின்றான். "புலவரே! ஏன் தயக்கம்? கிரீடத்தைக் கழற்றிவிட்டு மாலையைச் சூட்டுங்கள். பிறகு கிரீடத்தை வைத்து அலங்காரத்தை முடியுங்கள். பூஜையை தொடங்குங்கள். காளி மாதா ஏற்றுக்கொள்வாள்." என்று கூறிவிட்டு அவரைத் தாண்டிச் சென்று விட்டான் காளிதாசன்.

திடுக்கிட்டுக் கண்விழித்தார் தண்டிகவி. "என்ன ஆச்சரியம்! என்மனதில் நடக்கும் போராட்டத்தை அறியும் வல்லமை படைத்துள்ளானே? காளிதாசன் உண்மையில் என்னினும் உயர்ந்தவன்தான். அவனே சிறந்த காளிபக்தன். என் மனமாசு அகன்றது. தாயே காளிமாதா! உன் மகனைச் சந்தேகித்த என்னை மன்னித்துவிடு." என்றபடியே காளிதாசன் சென்ற திசையை நோக்கிக் கரம் குவித்தார் தண்டிகவி.

இறைவனிடம் அன்பு காட்ட செயல்கள் அவசியமல்ல. மனமே முக்கியம். அன்புக்கே இறைவன் கட்டுப் படுபவன் என்ற உண்மையை நாமும் புரிந்து கொள்வோம்.
 

No comments:

Post a Comment