Wednesday 14 March 2012

மன அழுத்தம்

கிராமப்புறங்களில் வாழ்வது தனி மகிழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். கிராமங்களில் வீசும் இதமான காற்று, அமைதியான சூழல், அங்கு வாழும் மக்களையே மன அழுத்தத்திலிருந்து வெளியில் கொண்டு செல்லும், மேலும் அவர்களை அமைதியை நாடச்செய்யும். ஏதேனும் ஒரு சூழ்நிலையில் மனஅழுத்தம் ஏற்பட்டால் கூட அங்கு நிலவும் அமைதியின் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

கிராமப்புறத்தில் வாழும் மனிதர்களை விட நகர்ப்புறத்தில் வசிக்கும் மனிதர்கள் அதிக மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. நகர்புறத்தில் காணப்படும் வேறுபட்ட சமூக அமைப்பு, அதிக சப்தம் மற்றும் மக்கள் நெருக்கடி ஆகியவை காரணமாக மூளையின் அதிக உணர்வு கொண்ட மற்றும் மனஅழுத்தத்துடன் தொடர்பு கொண்ட அமைக்டலா என்ற பகுதி அதிகமாக செயல்படுவது தெரிய வந்துள்ளது.

மேலும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பகுதியாகவும், சுற்றுப்புறத்தோடு தொடர்பு கொண்டதாகவும் விளங்கும் மூளையின் மற்றொரு பகுதியான சிங்குலேட் கார்டெக்ஸ், நகர்ப்புறத்தில் பிறந்தவர்களிடம் தேவையற்ற வகையில் அதிகமாக செயல்படுவதும் ஆய்விலிருந்து தெரிய வருகிறது.

வரும் 2050-ம் ஆண்டிற்குள் ஏறக்குறைய 70 சதம் பேர் நகர்ப்புற வாழ்க்கைக்கு வந்து விடுவர் என கூறப்படுவதால் ஒழுங்கற்ற மனநிலை, எதிலும் அதிக ஆர்வமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க சிறந்த மனநலத்துடன் வாழ்வதற்கு ஏற்ப நகர்ப்புறங்களை தற்போதிருந்தே வடிவமைத்து அதற்கேற்ற வகையில் வாழ்க்கை முறையினை அமைத்து கொள்வது நலம் தரும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மன அழுத்தத்தை தவிர்க்க சில எளிமையான வழிமுறைகள்

தேவையற்ற விவாதம் வேண்டாம்

மன அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிற சூழல்கள் வீட்டிற்கு வெளியில் இருந்து ஏற்படுகிறது. அதனை அப்படியே வெளியே விட்டு விட வேண்டும். வீட்டிற்குள் கொண்டு வந்து தேவையில்லாமல் அதை விவாதிக்க கூடாது. மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழல்களை சமாளிக்கப் பழகவேண்டும். தேவையில்லாமல் விவாதம் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் தரக்கூடாது.

மனஅழுத்தம் ஏற்படும் போது தனிமையை நாடுங்கள்

மனஅழுத்தம் ஏற்பட்ட சூழலில் தனிமையை நாடுவது நல்லது. அது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும். நீங்கள் தனிமையை நாடும் போது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் ஏன் தனிமையை விரும்புகின்றீர்கள் என்று தெரியும். வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

உறவுகளிடம் கேளுங்கள்

உங்கள் உறவுகளுடன் இனிய சூழலை கடைபிடியுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தை உறவுகள் மீது திணிக்காதீர்கள். உங்களின் மன அழுத்தம் உறவுகளுக்கும் பாதிப்பபை ஏற்படுத்தும் எனவே மனதை எளிதாக்கி  உறவுகளை உற்சாகப்படுத்துங்கள். மன அழுத்தமான சூழ்நிலையில் உங்களின் நடவடிக்கைகள் உங்கள் உறவுகளை எவ்வாறு பாதிக்கிறது என்று கேளுங்கள்.

கவலைக்கு முற்றுப்புள்ளி

கவலைதான் மன அழுத்தத்தின் ஊற்றுக்கண். அதிலிருந்து தான் மன அழுத்தம் பெருக்கெடுக்கிறது. எனவே கவலைக்கு கட்டுப்பாடு போடுங்கள். கவலை ஏற்படுவதை கட்டுப்படுத்துவது உங்கள் கையில்தான் இருக்கிறது.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்

உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். அது தானாக உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

வளைந்து கொடுங்கள்

எதற்குமே வளைந்து கொடுக்காமல் இருப்பதுதான் மன அழுத்தத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஒரு சில விசயங்களில் நாணலைப்போல வளைந்து கொடுத்தால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கின்றனர் உளவியலாளர்கள்.

மன்னிக்கும் மனப்பான்மை

என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள். மன்னிக்கும் மனப்பான்மை இருந்தால் மன அழுத்தத்தை குறைத்து விட முடியும்.

No comments:

Post a Comment