நீங்கள் யோகா கற்க
விருப்பம் உள்ளவரா? உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனையா? யோகா கற்க உங்களுக்கு
யாரேனும் அறிவுரை கூறினார்களா? அல்லது தற்போது நீங்கள் யோகா கற்று கொண்டு
இருக்கிரீர்களா?
நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம் என்பது பழ மொழி
ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான சூழலில் ஏற்பட்டுள்ள ஏராளமான பிரச்சனைகளால் நோயற்ற
மனிதனைப் பார்ப்பது அரிதாகி விட்டது. காலையில் எழுந்தது
முதல் இரவு வரை நம் வாழ்கை முறை மாறி, உடல் உழைப்பு
குறைந்ததனால் உடலின் பலம், நோய் எதிர்ப்பு
திறன் ஆகியவை குறைந்ததுடன் ஆயுளும் சுருங்கி விட்டது. விஞ்ஞானம், நாகரீகம் வளர்ந்து
உள்ளது ஆனால் மனிதனின் வாழ்க்கைத் தரம் குறைந்து விட்டது. போட்டி, பொறாமைகளினால்
நமது வாழ்க்கை சீரழிந்துவிட்டது. அதற்கு தீர்வு
யோகம் கற்று வாழ்க்கையை மேம்படுத்துவதே.
ஆனால் இன்று
எத்தனை யோகா ஆசிரியர்கள் திறமையானவர்களாக உள்ளனர் என்றால் அது கேள்விக்குறி!
இன்றைய காலகட்டத்தில் யோகா என்பது பொருளீட்டும் ஒரு வேலையாக உள்ளதே தவிர உண்மையாக,
திறமையோடு மற்றும் சமுதாய நோக்கத்தோடு யோகா கற்றுத்தருபவர்கள் மிகச்சிலரே. யோகா
ஆசிரியர்களின் உண்மையான நிலையை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.
நம் நாட்டில்
வாழ்ந்த ரிஷிகள் நமக்கு கொடுத்த விஷயங்கள் ஏராளம். அவை அனைத்தும் மனிதனுக்கு ஓர்
நன்கொடை. மனிதர்களாகிய நாம் அந்த பரம்பொருளை உணர ஒரு படிக்கட்டு. அவற்றினுள் யோகம்
முதலிடம் வகிப்பதோடு மட்டுமல்லாமல் இன்றய தேவையும் கூட. யோகத்தைப் பற்றிய
ஆராய்ச்சியில் பதஞ்சலி முனிவரும், திருமூலரும் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.
யோகத்தில் பல வகைகள் உள்ளன. உதாரணம் ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம், இராஜ
யோகம், அஷ்டாங்க யோகம்,
ஹட யோகம், குண்டலினி யோகம் இன்னும் பல உள்ளன.
யோகம் என்ற சொல்
யுஜ் என்ற வேர் சொல்லிலிருந்து வந்தது. யுஜ் என்றால் இணைதல் என்று பொருள். அதாவது
ஜீவாத்மாவும் பரமாத்வாவும் இணைய வேண்டும் என்பது நோக்கம். ஆனால் இன்று
பெரும்பாலானவர்கள் யோகா பயில்கிறேன் என்று ஆசனத்தை பயிற்சி செய்து கொண்டு
இருக்கிறார்கள். உண்மையில் யோகா பயில்வதின் நோக்கம் என்ன? பதஞ்சலி முனிவர் இயற்றிய
யோக சூத்திரத்தில் அத்யாயம் இரண்டு ஸ்லோகம் இருபத்தி ஒன்பதில் அஷ்டாங்க யோகத்தை
பற்றி விளக்குகிறது. அஷ்டாங்க (அஷ்ட + அங்க) என்பது எட்டு வகையான அங்கங்கள் என
எளிமையாகக் கூறலாம்.
அவை முறையே:
இயமம் : தவிர்க்கப்பட
வேண்டியவை
நியமம் : பின்பற்றப்பட
வேண்டியவை
ஆசனம் : இருக்கை (உடலை
வளைத்து செய்யக்கூடிய பயிற்சி)
பிராணாயாமம் : மூச்சுப் பயிற்சி
பிரத்தியாகாரம் : மனதை புலன் வழி
நாட்டத்திலிருந்து திருப்புதல்
தாரணை : மனதை
ஒருமுகப்படுத்துதல்
தியானம் : மனதை ஒரே
சிந்தனையில் நிலைநிறுத்துதல்
சமாதி :
ஆழ் நிலை தியானம்
இவற்றில் முதல் ஐந்தும் உடலும், மனமும் சம்பந்தப்பட்டவை எனவே இதை பகிரங்க
யோகம் எனவும், அடுத்த மூன்றும் மனமும், ஞானமும் சம்பந்தப்பட்டவை எனவே அதை அந்தரங்க
யோகம் எனவும் கூறப்படுகிறது. அஷ்டாங்க யோகத்தின் கடைசி நிலை சமாதி. எவர்
ஒருவருக்கு சமாதி கைகூடுதோ அவருக்கு அஷ்ட சித்தி கிடைக்கும். சமாதி நிலையை
அடைந்தவர் சித்தராகிறார். இந்த எட்டு நிலைகளையும் படிப்படியாக கற்று முக்தி அடைய
வேண்டும் என்பது நம் முன்னோர்களின் கூற்று. அதுவே யோகத்தின் தாத்பரியம்.
அஷ்டாங்க
யோகத்தின் மூன்றாவது நிலை ஆசனம். ஆசனம் என்பது உடலை வளைத்து செய்யக் கூடிய
பயிற்சி. “சுவரை
வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்” என்பது பல மொழி, அது போல உடம்பு இல்லாமல் எந்த செயலையும் செய்ய முடியாது
என்பது நிதர்சனமான உண்மை, எனவே இன்றைய காலகட்டத்தில் உடலினை பேணி பாதுகாப்பது
என்பது அவசியமானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. ஆனால் இன்றைய பெரும்பாலான யோகா
ஆசிரியர்கள் அவர்களுக்கு தெரிந்த இருபது முப்பது ஆசனங்களை வைத்துக்கொண்டு யோகா
கற்று தருகிறேன் என்று ஆசனம் மற்றும் பிராணாயாமம் மட்டுமே கற்று கொடுக்கின்றனர்.
ஆசனம் மற்றும் பிராணாயாமம் யோகத்தின் ஒரு பகுதியே தவிர அதுவே முழுமையான யோகம்
ஆகாது. உண்மையில் அவர்களுக்கு உடற்கூறியல் மற்றும் உடலிங்கியல் எவ்வாறு வேலை
செய்கிறது என்பது தெரியுமா என்றால் சந்தேகம். எந்த நோய்க்கு என்ன ஆசனம் பயில
வேண்டும் என்றால் தெரியாது. எந்த நோய்க்கு என்ன ஆசனம் பயிற்சி செய்ய கூடாது
என்பதுவும் தெரியாது. இவர்கள் யோகா ஆசிரியர்கள். இவர்களிடம் தான் நாம் யோகாசனம்
பயில்கிறோம்.
புத்தகத்தை
படித்தோ அல்லது முறையற்ற ஆசிரியர்களிடமோ யோகா கற்க கூடாது. ஏன்? நம் உடல் மிகவும்
நுட்பமான பல பாகங்களை கொண்டது. அதை மிகவும் கவனமாக கையாள வேண்டும். யோகா கற்கிறேன்
என்று நம் உடலை நாமே கெடுத்துக் கொள்ளக்கூடாது. அதிலும் குறிப்பாக வியாதி
உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உதாரணமாக சர்கரை
வியாதி உள்ளவர்களுக்கு அதனோடு சேர்ந்து இரத்த அழுத்த நோயோ அல்லது உடற்பருமன் போன்ற
ஏதேனும் ஒன்று கூடவே இருக்கும். யோகா சிகிச்சை (தெரபி) தெரியாதவர்கள் சர்கரை
வியாதிக்கு ஆசனம் கற்று தருவார்கள். அதில் சில ஆசனங்கள் இரத்த அழுத்த நோய்க்கு
உகந்ததாக இருக்காது. அதனுடைய விளைவு சர்கரை வியாதி குறைந்து இரத்த அழுத்த நோய்
அதிகமாகிவிடும். சரியான முறையில் யோகா சிகிச்சை கற்று தரும் நிறுவனங்கள் மிகவும்
குறைவு. தற்போது நீங்கள் யோகா கற்று கொண்டு இருக்கிறீர்களா தயவு செய்து உங்களுடைய
ஆசிரியரின் அனுபவ ஞானத்தை சரிபார்க்கவும்.
இன்றைய கால
கட்டத்தில் கல்வி என்பது வியாபாரமாகிவிட்டது. பல கல்வி நிறுவனங்கள்
யோகாவை ஒரு பாட திட்டமாக வைத்துள்ளது. அது எந்த அளவுக்கு தரமானதாக இருக்கிறது
என்றால் மிகவும் கவலை அளிக்கிறது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் பணத்துக்காக பல
வகையான படிப்புகளை அறிமுகப்படுத்துகின்றன அதில் யோகா பிரபலமடைந்து வருகிறது.
அவர்களிடம் முறையான பாட திட்டமும் இல்லை, அனுபவம் மிக்க
ஆசிரியர்களும் இல்லை. முறையற்ற கல்வி நிறுவனங்களில் பயிற்சி
பெற்ற ஆசிரியர்கள் யோகா வகுப்பு எடுப்பதால் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றன.
இது வரைக்கும் பெரிய அளவில் பிரபலமான பிரச்சனை வரவில்லை என்றாலும் சிறிய அளவில்
ஆங்காங்கே சில பிரச்சனை உருவெடுக்கிறது. அதை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும்.
நமது முன்னோர்கள் உலகிற்கு கொடுத்த மிகச்சிறந்த
கொடை யோகா. அதனை பாதுகாப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாகும். அனைத்து யோகா ஆசிரியர்களும், எந்த நோய்க்கு என்ன ஆசனம் பயிற்சி செய்ய
வேண்டும், எந்த நோய்க்கு என்ன ஆசனம் பயிற்சி செய்ய கூடாது என்பதுவும் மிக நன்றாக
தெரிந்து வைத்திருக்க வேண்டும். யோகா ஆசிரியர்கள் அனைவரும் முறையான கல்வி
நிறுவனங்களில் பயிற்சி எடுத்து பணத்துக்காக அல்லாமல் வேலையையே சேவையாக செய்ய முன்
வரவேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டாம் என்பது நோக்கம் அல்ல. பணமும் சம்பாதியுங்கள்
சேவையும் செய்யுங்கள் என்பது என் வேண்டுகோள். அரசாங்கமும், முன்னணி கல்வி
நிறுவனங்களும் தரமான யோகா பாடதிட்டத்தை கொண்டு வர முன்வர வேண்டும். மத்திய
அரசாங்கம் ஒரு குழு அமைத்து யோகா பாடதிட்டம் சரியாக உள்ளதா என சரி பார்த்து
அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தரச்சான்றிதல் அளிக்க முன்வர வேண்டும். மக்களும்
முறையான, தரமான குருவிடம் பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும்.